தொடக்கமும் முடிவும்

நிஜத்தில் அவன் ஒரு எழுத்தாளன் இல்லை. ஆனால் எழுத்துக்கள் மீது காதலும் கற்றலில் ஆர்வமும் உள்ளவன். ஆர்வம் உள்ளவன் என்றாலும் நெடிய வாசிப்பு பழக்கம் உடையவனும் இல்லை. தனக்கு பிடித்தமான கதைக்களங்களும், தன்னை ஈர்க்கும் கதாபத்திரங்களுமே அவன் வாசிப்பை வலுபடுத்தின. அதிலும் சிறுகதைகளும் குறுங்கதைகளும் அவன் வாசிப்பு நேரத்தை ஆக்கிரமிக்க தவறியதில்லை. சிறுகதைகளும், குறுங்கதைகளும் படைப்பவனை மட்டுமே கதையின் போக்கை நிர்ணயம் செய்ய விடாது வாசிப்பவனையும் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுக செய்யும் என்பது அவன் சொல்லும் காரணம். சில புத்தகங்கள் பல முறை நம்மை வாசிக்க தூண்டும். சில புத்தகங்கள் ஒரு முறையேனும் நம்மை எழுத தூண்டும். அந்த கதையை விட்டு கதாபாத்திரத்தின் தாக்கத்தை விட்டு வெளியே வந்தவுடன் நீயெல்லாம் எழுத போகிறாயா? எனும் உட்குரல் கேட்டவுடன் கதை எழுதும் ஆசை சிறு புன்னகையோடு கரைந்து விடும். சில சமயம் அந்த மனப்போரில் வென்று ஏதேனும் வார இதழுக்கோ இணையதளத்திற்கோ எழுதலாம் என தொடங்கிய சில கதைகள் எப்படி முடிப்பதும் என்று தெரியாமலும், முடிவுகள் தெரிந்த சில கதைகள் எப்படி தொடங்குவது என்று தெரியாமலும் அதிலும் சில கதைக்கருக்கள் இரண்டுமே தெரியாமல் கதாபாத்தித்திற்கு பெயர் சூட்டியதோடு அவன் மனதிலேயே நின்று விடும். பயணங்களில்தான் அவனுக்கு எழுத தூண்டும் மனநிலை உருவாகும். இரவு நேர தொடர்வண்டி பயணத்தில் ஜன்னல் வழியாக அடர்ந்த இருட்டில் தெரியும் தூரத்து ஒளியும், கண் இமைக்கும் நேரத்தில் தன்னை விட்டு நீங்கும் மரங்களும், கடக்கின்ற வழியில் நெல் வயலுக்கு மத்தியில் ஒரு குடிசையில் தன் தந்தை அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறத்தில் இருக்கும் கம்பியில் நிற்கும் சிறுமி அந்த வெண்ணிலாவை நோக்கி ஏதோ பேசுவதும், திடீரென தன் வேகத்தை குறைத்த தொடர்வண்டி பாலத்தின் மேல் செல்லும் போது அந்த நதியின் அமைதியும், எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டி தாத்தாவின் முதுமைக் காதலும் சற்றுமுன் தொடர்வண்டி நிலையத்தில் கண்ணில் பட்ட புதிதாய் திருமணம் செய்திருக்கலாம் என அவன் யூகித்த அந்த தம்பதிகளின் இளங்காதலும், செவிபேசியில் கேட்ட பாடல் வரிகள் நினைவூட்டிய தன் முடிந்து போன காதலும் அவன் தன் காதலியின் மீது கொண்ட முடிவில்லாத அன்பும், தொடர் வண்டி கிளம்பியதிலிருந்தே தொடர்ந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் குரலும், அக்குழந்தையை தோளில் போட்டு அழுகையை நிறுத்த பாடிய ஒரு தந்தையின் தாலாட்டும், இறுதியாக தன் பெட்டியில் விளக்குகள் அணைத்த பிறகும் ஓயாத ஒரு கைப்பேசியின் ஒலியும் மற்றொரு கைப்பேசியின் ஒளியும் அதில் ஒரு இளம் பெண் தன் காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் , மற்றொன்றில் ஒரு இளம் ஆண் தன் காதலிக்கு மட்டுமே கேட்க வேண்டும் என செவிபேசியில் பேசலாம் என்னும் அவன் யூகங்களும், கண் மூடி இரு நிமிடம் யோசித்த போது தன் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் அவன் பதட்டமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அப்போது மெல்ல மெல்ல இருள் நீங்கி பிறந்த புதிய விடியலும் எங்களை பற்றி ஏன் நீ கதை எழுத கூடாது என்றும், இல்லையேல் எங்களை எல்லாம் வைத்து ஏன் கதை எழுத கூடாது என்றும் கேட்டது. இம்முறையும் கதையை எங்கே எப்படி தொடங்கி எப்படி முடிப்பது என்று தெரியாமல் நின்றவன், வாசிப்பவரிடமே இரண்டையும் விட்டு விட்டான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s